Monday, October 04, 2004

உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!

நலம், நலமறிய அவா.

சென்ற வருடம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் நாம் படித்த GCT கல்லூரிக்கு பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது!

கல்லூரி வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கூடைப்பந்தாட்டக் களம், கான்டீன், விளையாட்டரங்கம், Table Tennis ஆடிய, TV கண்டு களித்த Gymkana, உணவகங்கள் (mess), பாடம் பயின்ற வகுப்பறைகள், திரையரங்கம், வைகை, பவானி, காவேரி என்றழைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் ஆகியவற்றை மறுபடியும் தரிசித்தபோது, நாம் கல்லூரியில் பயின்ற கால கட்டத்தில் சந்தித்த பலவிதமான நிகழ்வுகள் குறித்த ஞாபகங்களும், உணர்வுகளும், பெரு வெள்ளம் போல் என் நெஞ்சில் மோதியது.

நாம் முதலாண்டின் போது தங்கியிருந்த விடுதி, தற்போது சிறைச்சாலைப் போல, முற்றும் இரும்பு வேலியால் (Ragging நடைபெறா வண்ணம்) சூழப்பட்டுள்ளது! அதற்கென தனியாக 24-மணி நேரக்காவலரும் நியமிக்கப் பட்டுள்ளனர். பொதுவாக, முதலாண்டு மாணவர்களைத் தவிர வேறு யாரும் அவ்விடுதியில் நுழைய அனுமதிக்காத காவலர், நான் பல வருடங்களுக்கு முன் அவ்விடுதியில் தங்கிப் படித்தவனென்பதையும், வந்த காரணத்தையும் கூறியவுடன், அவர், "உங்களுக்கில்லாத அனுமதியா? உரிமையா?" என்று நட்புடன் கூறி, உள்ளே செல்ல அனுமதித்தார்! நானும் 'சக அறையர்' பழநியும் வாழ்ந்த 116-இலக்க அறை, ஒரு பக்கம் சற்று உடைந்த கண்ணாடியுடன் கூடிய ஜன்னலுடனும், பழுப்பு வண்ணக் கதவுகளுடனும், அதே வாசனையுடனும் அப்போதிருந்த மாதிரியே தோன்றியது!!

நாம் ECE பயின்ற காலத்தில் இளம் விரிவுரையாளராக இருந்த 'LP Madam' இப்போது ECE துறைக்கு தலைவராக (தலைவியாக!) உள்ளார். அண்ணாதுரை அவர்கள் கணினி அறிவியல் துறைத் தலைவராக உயர்ந்துள்ளார். நம் கல்லூரி அலுவலகக் கட்டிடத்தின் முகப்பிடத்தில், அப்போதைய கல்லூரி முதல்வர் திரு.சாமுவேல் மற்றும் துணை முதல்வர் திரு.WGK அவர்களின் புகைப்படங்கள் புதிதாகத் தோன்றியிருந்தன. நாம் அடிக்கடி செல்லும் கல்லூரிக்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றபோது ஓர் ஆச்சரியம்! நாம் அன்று பார்த்த அதே அர்ச்சகர் இன்றும் இறை சேவை செய்து வருகிறார். அந்த பிள்ளையார் Semester தேர்வுகளில் போது நமக்கு எவ்வளவு உதவியிருக்கிறார் என்பதை நீ நன்றாக அறிவாய்!!!

முன்பிருந்தது போலவே, நமது கல்லூரியில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகமாகவே உள்ளது! நான் சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். அவர்களிடம் நானும் ஒரு GCTian என்று கூறியபோது, நாம் படித்த காலத்தைப் பற்றிய பலவித வினாக்களை எழுப்பி, பதில் வேண்டி என்னை திணறடித்து விட்டார்கள்!
அந்த ஒரு நாள் கல்லூரி விஜயத்தின் போது, என்னுள் ஒர் இன்பப் பிரவாகமாய் பொங்கியெழுந்த, நிகழ்வுகளின் நினைவுகளான,


1. ஏதோ ஒரு முக்கியமான கிரிக்கெட் ஆட்டத்தில், நமது ஷியாம் அனாயசமாக விளையாடி 100 ரன்களைக் குவித்தபோது, அவனுக்கு மாலையிட்டு நாம் அனைவரும் அவனை தோள் மீது சுமந்ததும்
2. நம்முடன் படித்த பாலாஜிக்கும் (குள்ளிபீஸ்!) மாதப்பாவுக்குமிடையே, ஓரு அழகிய மாலை வேளையில் செயற்கை ஓளியில் நடைபெற்ற ஓர் அற்புதமான பூப்பந்தாட்ட இறுதி ஆட்டமும்
3. காலஞ்சென்ற நம்முயிர் சிநேகிதன் ப்ரீதம், Mock Press என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில், சாத்தானாக தோன்றி நடித்து, வெளுத்துக் கட்டியதும்
4. AD-APT போட்டிகளில் வெளிப்பட்ட, 'நாரி' என்று அன்போடு அழைக்கப்பட்ட TS நாராயணனின் அபாரமான பேச்சுத்திறனும்
5. பல நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் சோர்வை காட்டாமல் ஓடி வென்ற நமது முருகதாஸிடம் இருந்த இறுதிச்சுற்று (Final Lap) நிபுணத்துவமும்
6. நமது நந்துவின் Table Tennis சாதனைகளும்
7. GRE, CAT, GATE என்று அனைத்துத் தேர்வுகளுக்கும், ஒரே சமயத்தில் படித்து, எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்ற தோழன் வசந்த்தின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும்
8. கூடைப்பந்தாட்டக் களத்திலுள்ள இருக்கைகளில் அமர்ந்தபடி, அவ்வழியாகச் செல்லும் மாணவிகளை கண்களாலேயே விழுங்கிய 'ஜொள்' செந்தில் மற்றும் 'படூ' செல்வராஜின் இளமைக் குறும்புகளும்
9. GS-இன் தாங்க முடியாத 'கடி' ஜோக்குகளும்
10. கல்லூரி விழாக்களில் பல முறை ஒலித்த அசோக்கின் மயக்கும் குரல் வளமும்
11. கல்லூரியின் அழகு தேவதை ஆஷா ஜார்ஜ் பங்கு பெற்ற நீளம் தாண்டும் போட்டியும்
12. கல்லூரித் திரையரங்கில், ஓர் இரவுக்காட்சியின் நடுவே, படத்துக்கு சம்மந்தமில்லாத, 'தணிக்கை செய்யப்படாத' சில காட்சிகளைப் புகுத்திய குமரவேலின் அசாத்திய துணிச்சலும்
13. மூன்றாமாண்டு படித்தபோதே, இறுதியாண்டு மாணவரை பிரமிக்கத்தக்க வகையில் வென்று, Overall Sports Shield-ஐ கைப்பற்றியதும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இரவு நேரக் களியாட்டங்களும்
14. 'தலைவர்' என்று மரியாதையோடு (வேலையை விட்டு மறுபடி படிக்க வந்ததால்!) அழைக்கப்பட்ட சேகர், ஆரோக்கியம் வேண்டி, தினம் மாலையில், மைதானத்தைச் சுற்றி, வியர்க்க விறுவிறுக்க ஓடிய காட்சியும்
15. முதலாம் ஆண்டு படிக்கையில், மாலை/இரவு வேளைகளில் நமது அறைகளில் விளக்கெரிய 'தடா' போட்ட senior மாணவர்கள், விளக்கெரிவதைப் பார்த்து விட்டால், அமர்க்களமாகக் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, நம்மை கதி கலக்கியதும்

என் நெஞ்சை விட்டு என்றும் அகலா!!!

உன் உயிர்த் தோழன்
பாலா


9 மறுமொழிகள்:

அன்பு said...

பாலா,

நேற்று நான் கொடுத்த பின்னூட்டத்தை எங்கே? நாந்தான் நெற்றிரவு கொடுத்தேன். அதன்பின்னர், பத்ரி கூட "மாணவர்கள் இருக்கட்டும், இப்பொதுள்ள ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்" என்று கேட்டிருந்தார். ரெண்டையும் காணோம்!?

Kasi Arumugam said...

பாலா,

கிட்டத்தட்ட நான் GCT-யில் படித்த அதே காலத்தில்தான் நீங்களும் அங்கே போலும். (நான் 1983-1986). ஆனாலும் கட்டாயம் இருவருக்கும் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் பகுதிநேரப் படிப்பு படித்தேன். மாலை மங்கியபின் வந்து இரவு இருளில் போனவன். கல்லூரிக் கொண்டாட்டங்களெல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. Confulence GCT என்று நினைக்கிறேன், ஒரு விழா நடக்குமே, அதன் சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கட்டாயம் GCTயின் சூழல் வித்தியாசமானதே. கொடுத்துவைத்தவர்கள், ஹும்!

Kannan said...

சொந்தக் குறும்புகளை அடக்கி வாசிச்சிருக்கீங்க போல. ஏன் பாலா, ஊட்ல தெரிஞ்சா 'டின்' கட்டிருவாங்களா?
:-)

enRenRum-anbudan.BALA said...

கண்ணன்,
டின்னுக்குள்ளே பெரிய கல்லைப் போட்டு, முதுகிலே கட்டி, மெரீனா பக்கம் கடல்லே இறக்கி உட்ருவாங்கப்பா!!! இதெல்லாம் correct-ஆ கண்டு பிடிச்சுருவீங்களே!!!

enRenRum-anbudan.BALA said...

அன்பு மற்றும் பத்ரி அவர்களின் பின்னூட்டங்களை நான் தவறுதலாக அழித்து விட்டேன். அவற்றை நான் ஏற்கனவே சேமித்து (saved!) வைத்திருந்ததால், கீழே மறு-பதித்திருக்கிறேன்.

வணக்கம் பாலா,

எப்பொதும் 'மலரும் நினைவுகள்' இனிமையானவை. அதிலும் கல்லூரி நினைவுகள் சொல்லவும் வேண்டுமா... சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள். அதிலும் உங்கள் தமிழ் வெகுசிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது(முதல்முறை) படித்தது: 'சக அறையர்'
அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

--
Posted by அன்பு to என்றென்றும் அன்புடன், பாலா at 10/3/2004 04:59:19 AM



GCTயில் கல்வித்தரம் இப்பொழுது எப்படியுள்ளது? மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தாலும் ஆசிரியர்களின் தரம் எப்படியுள்ளது?

--
Posted by Badri to என்றென்றும் அன்புடன், பாலா at 10/3/2004 11:41:36 AM

Badri Seshadri said...

ஆகா, GCT மாஃபியா ஒன்றே இணையத்தில் [அட் லீஸ்ட் தமிழ் வலைப்பதிவு உலகில்] இருக்கிறது போலுள்ளதே?

Kasi Arumugam said...

An OFF-TOPIC request:

Bala, can you make a change in your blogger.com

settings->formatting->Show [x]days posts on the main page.

as something less than 30 days? This will help avoiding duplicate posts in thamizmanam.com readers page.

Thanks,
-kasi

enRenRum-anbudan.BALA said...

Kasi,
It is not because of the settings->formatting->Show [30]days posts on the main page.

It is actually set to show 20 posts on main page.

I am not sure what happened. I was just doing some template change only.

warm regards,
BALA

Kasi Arumugam said...

Bala,
please change it to 29 days. Don't use number of posts, you have written some 17 posts in two months. It is not possible to keep records for 200 odd blogs for many months in thamizmanam database. So your old post may be understood as new!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails